இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய, 'சந்திராயன்-1' விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வரும் 22ஆம் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட் டவுன் 20ஆம் தேதி தொடங்குகிறது.
முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான 'சந்திராயன்-1' விண்கலம் பி.எஸ்.எல்.வி.சி.-2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் தத்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சந்திராயன்-1' விண்கலத்தை வரும் 22ஆம் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும். 380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-2 ராக்கெட், இந்த விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இதற்கான மொத்தச் செலவு ரூ.386 கோடியாகும்.
இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.விண்கலம் வரும் 18ஆம் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி.சி.-2 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 'கவுன்டவுன்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக 20 தேதியன்று தொடங்கும். 22ஆம் தேதி காலை 6.20 மணிக்கு 'சந்திராயன்-1' விண்ணில் ஏவப்படும்.
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக அனுப்பப்படும் 'சந்திராயன்-1' விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுவதும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை.
சந்திராயன் -1 ஏவப்பட்ட 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9ஆம் தேதி முதல் சுற்றும்.
விண்கலத்தில் உள்ள 'மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற கருவி நிலவில் இறங்கி நிலவில் உள்ள, மண்வம், நீர் ஆதாரம், கனிமவளம் உள்பட பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆண்டெனாக்கள் மூலம் கிடைக்கும். தொடர்ந்து 2 ஆண்டுகள் சந்திராயன் விண்கலம் செயல்படும். இதற்குத் தேவையான 100 கிலோ எரிபொருள் அதில் உள்ளது என்று தத்தன் கூறினார்.