இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை வரவேற்பதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை தமிழர்களின் வேதனையான சூழ்நிலை, நம்மை தீராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் குண்டுகள் வீசும் போதெல்லாம் நம் கண்முன்னே தமிழ் இனம் அழிவதை இயலாமையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறோம். இலங்கை தமிழர் பிரச்னையை ஒரு நாட்டின் பிரச்னையாக ஒதுக்கிவிட முடியாது.
உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு அநீதி ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் ஏற்படும் அநீதி.
இலங்கையில் நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்திக் கொண்டு பேச்சு மூலம் இலங்கையில் நிரந்தர அமைதி நிலவ செய்ய வேண்டும். அதற்கேற்ப இந்திய அரசும் இங்குள்ள தலைவர்களும் இந்த கருத்தை இருதரப்பினரிடையேயும் வற்புறுத்த வேண்டும்.
இந்நிலையில், வரும் 14ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த இருப்பதை வரவேற்கிறோம். இந்த கூட்டத்தின் முடிவுகள் இலங்கை தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் இறுதிக் கட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.