தொலை தொடர்பு துறையில் அலைவரிசை தொகுப்பு (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும் இது தொடர்பான விசாரணையை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மட்டும் அலை வரிசை (ஸ்பெக்ட்ரம்) குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ரூ.25,000 கோடி நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அலைவரிசைகளை ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்ததாகவும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு விட்டதாகவும் குற்றஞ் சாட்டுகிறார்கள்.
சமூக நோக்கத்தில் கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் 2ஜி அலைவரிசைக்கான உரிமமும், ஒதுக்கீடும் வருவாயில் பங்கு என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
3ஜி அலைவரிசையை பொருத்த வரை அதன் உபயோகிப்பாளர்கள் உயர் வருவாய் பிரிவினர்கள் என்பதால் அந்த அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
தற்போது 4 புதிய நிறுவனங்களுக்கு அலைவரிசை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். ஏல விற்பனை மூலம் ஒரே நேரத்தில் கிடைக்கும் வருவாய் குறைவானதே. ஆனால் தற்போது வருவாயில் பங்கு மூலம் ஆண்டுக்கு ஆண்டு அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்து வருகிறது.
எனவே தான் ஏல விற்பனை முறைக்கு பதிலாக வருவாயில் பங்கு அடிப்படையில் 2ஜி அலை வரிசையை ஒதுக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. அதன்படி தகுதி அடிப்படையில் பாராளுமன்ற ஒப்புதல்படி, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதலோடு விதிமுறைகளின்படியே அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதில் எந்தவிதமான விதிமீறலோ, சட்ட மீறலோ கிடையாது. குறிப்பிட்ட யாருக்கும் சலுகைகளும் வழங்கப்படவில்லை, வழங்கவும் முடியாது. இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.
வரும் டிசம்பர் மாதம் 3ஜி அலை வரிசை சேவைத் திட்டத்தை டெல்லியில் பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். அதேபோல், பொங்கல் திருநாளில் சென்னையில் முதலமைச்சர் கருணாநிதி இந்த 3ஜி அலை வரிசை சேவையை தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.