மத அமைதியை சீர்குலைக்க முயல்வோர் எவராயினும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிருத்தவர்கள் மற்றும் அவர்களுடைய உடைமைகள் மற்றும் தேவாயலங்கள் மீதான தாக்குதல்களையடுத்து மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு தேவாலயங்கள் மற்றும் கிருத்தவ மத சம்பந்தப்பட்ட இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநிலத்தில் சில இடங்களில் கிருத்தவ தேவாலயங்கள் மீது கற்களை வீசுவது, சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து, அச்சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக புலன் விசாரணை மேற் கொள்ளப்பட்டு இது வரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் மத அமைதியை இது போன்ற சம்பவங்கள் மூலம் சீர்குலைக்க முயல்வோர் எவராயினும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.