Publish Date: Fri, 10 Oct 2008 (12:50 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது பெருந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், பழனிச்சாமியின் சகோதரர் குகமணி உள்ளிட்டோர் நிலப்பிரச்சனை சம்பந்தமாக கடத்தப்பட்டதாகவும், இந்த கடத்தல் முன்னாள் கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தூண்டுதல் பேரில் நடந்ததாகவும் குற்றம்சாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து என்.கே.கே.பி.ராஜா நீக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக பெருந்துறை காவல்துறையினர் 39 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தனது தீர்ப்பில், இந்த வழக்கில் பெருந்துறை காவல்துறையினர் மெத்ததனமாக இருந்துள்ளனர். இவர்கள் ஆரம்பத்திலேயே சரியாக செயல்பட்டிருந்தால் ஆள்கடத்தல் நடந்திருக்காது.
பலருடைய தூண்டுதல் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிகிறது. காவல்துறையினர் மனசாட்சிக்கும் கூட பயப்படவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆள்கடத்தல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது பெருந்துறை காவல்துறையினர் முதல் முறையாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.