இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தந்திகளை அனுப்பி வைக்குமாறு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எப்போதுமில்லாத வகையில் தமிழ் ஈழத்தில் உள்ள அப்பாவித் தமிழர்களை பூண்டோடு அழித்தொழிக்கும் நோக்கத்தோடு சிங்கள அரசு தனது ராணுவத்தை பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஈழத்தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த திட்மிட்டுள்ள சிங்கள அரசுக்கு இந்திய அரசு தகுந்த அழுத்தங்களைக் கொடுத்து இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு தந்திகள் அனுப்பும்படி தமிழக முதல்வர் அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகளும் வரவேற்றுப் பாராட்டியதுடன் விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் தந்திகள் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தோம்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பிரதமருக்கு தந்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சென்னையில் வடபழனி தந்தி அலுவலகத்திலிருந்து நேற்று கட்சியின் நிர்வாகிகள் கலைக்கோட்டுதயம், முகமது யூசுப், திலீபன், ஆர்வலன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பிரதமருக்கு தந்திகள் அனுப்பினர்.
இது போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து கட்சியினர் பிரதமருக்கு தந்திகள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.