தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் இன்று மீண்டும் அத்துமீறிய தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனர்வகள் சிலர் இன்று அதிகாலை கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறிலங்க கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டப்படியே மீனவர்களின் படகை நெருங்கி வந்தனர்.
பின்னர், படகில் ஏறி சோதனையிட்ட அவர்கள் படகில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தியதோடு மீனவர்கள் மீதும் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தி அவர்களை கடலில் தள்ளியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாலகிருஷ்ணன் என்ற மீனவர் பலத்த காயமடைந்தார். சிறிலங்கா கடற்படையினரின் இந்த அத்துமீறல் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தக் கோரி பலமுறை வலியுறுத்தியும் சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.