Publish Date: Wed, 08 Oct 2008 (15:28 IST)
Updated Date: Wed, 08 Oct 2008 (15:28 IST)
மத்திய அரசிடம் வலியுறுத்திக் கச்சத்தீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை திருச்சி மாவட்டப் பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகப் பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க.) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களின் நலன்களைக் காப்பதற்குக் கச்சத்தீவை சிறிலங்காவிடம் இருந்து மீட்பதுதான் ஒரே வழி என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறிலங்காவில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுதல், இந்திய மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் நடத்தும் தொடர்ந்த அத்துமீறிய தாக்குதல்கள் ஆகியவை தொடர்பாக மெளனம் காக்கும் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பெ.தி.க. கூறியுள்ளது.