ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி மற்றும் பெருந்தலையூரில் உள்ள தேவாலயங்கள், சிலைகள் மீது மர்ம கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
கவுந்தம்பாடியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரார்த்தனை கூடத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பிரார்த்தனை கூடத்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
இதேபோல் பெருந்தலையூரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தியது.
இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் முன்பு கூடி இந்த தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போதிய பாதுகாப்பின்மையே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றினர்.
ஒரிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்றும் இரவு ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவினாஷ் குமார் அப்பகுதியில் முகாமிட்டுள்ளார். தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிப்பதற்காக 3 சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 3 தேவாலய சிலைகள் சேதப்படுத்தப்பட்டது.