பீடித்தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், மாற்று வேலைவாய்ப்புக்கும் திட்டமிடாமல் புகை பிடிக்க தடை விதித்ததை கண்டித்து வரும் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த சம்மேளனத்தின் தலைவர் கே.வைத்தியநாதன், பொது செயலாளர் எம்.ராஜாங்கம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் உள்ள 75 லட்சம் பீடித்தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும், மாற்று வேலைவாய்ப்புக்கும் திட்டமிடாமல் இந்தியா முழுவதும் அக்டோபர் 2 முதல் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2 முதல் பீடி பண்டல் லேபிள்களில் 50 விழுக்காடு அளவில் காசநோய், மனித உடலின் எலும்புக்கூடு போட்டு பீடி விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அமல்படுத்தும் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரின் நடவடிக்கைகளை கண்டித்து அக்டோபர் 14ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 7 லட்சம் பீடித்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது என தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு உத்தரவால் தமிழ்நாட்டில் 7 லட்சம் பீடித்தொழிலாளர்கள் பீடி விற்பனையாளர் இந்த தொழிலை சார்ந்து நிற்கும் சிறுவியாபாரிகள் என கோடிக்கணக்கானவர் வேலை இழப்பு ஏற்படும்.
மேலும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தை அட்டவணையில் இல்லாத காவல்துறைக்கு கொடுத்துள்ளது. காவல்துறை இதை பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி லஞ்சம் ஊழலுக்கு வழிவகுக்கும் மக்கள் நலன் பேணுவது என்ற பெயரால் புதிய வேலை இழப்பை ஏற்படுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.