தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க இந்திய- இலங்கை கடற்படையினர் கூட்டாக கண்காணிப்பு மேற்கொள்ளும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக மீனவர்களை காக்கும் வகையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையை வலுப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சருடன் இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் கூட்டு கடற்படை கண்காணிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
கூட்டு கண்காணிப்பு திட்டம் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் அது நமக்கு சாதகமானது இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன், முந்தைய தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் விரிவாக விவாதித்து, கூட்டு கண்காணிப்பு கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்கள்.
இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சந்தித்த போது இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கு நவீன கருவிகள் மற்றும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். உடனடியாக இதை செய்து கொடுத்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்த சமயத்தில் நான் ஏற்கனவே கூறியபடி கூட்டு கண்காணிப்பு என்பது தேவையற்றதாகும். எனவே இந்த விடயத்தில் இலங்கை அரசின் கோரிக்கையை பரிசீலிக்க தேவை யில்லை என்று கேட்டு கொள்கிறேன்' என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.