வன்னிக் காடுகளில் பசி, பட்டினியால் தமிழர்கள் செத்து மடிகின்றனர் என்றும் இந்த கொடுமையை தடுத்து நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை என்றும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ குற்றம்சாற்றினார்.
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணக்கோரி தமிழகம் முழுவதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பேசுகையில், இலங்கையில் மூதாதையர்கள் வாழ்ந்த மண்ணை விட்டு பிரிந்து தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். விடியல் என்று பிறக்கும் என்ற அவர்களின் ஏக்கம், உண்ணாவிரதப் போராட்டத்தை நோக்கி திரும்பி உள்ளது.
இந்த குரல் செவிடாகி போன மத்திய அரசின் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். எந்த இனம் அழிக்கப்பட்டாலும், அதை காக்க வேண்டியது காந்தி பிறந்த இந்திய நாட்டின் கடமை. தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ள ராஜபக்சே அரசு துடிக்கிறது. உலகத்தில் அழிவு நடப்பதை தடுக்க ஐ.நா அமைப்பும் மனித உரிமை ஆணையமும் உருவாக்கப்பட்டன.
தமிழர் வாழும் பகுதிக்குள் அவர்கள் செல்ல சிறிலங்க அரசு மறுத்துவிட்டது. தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மிரட்டி வெளியேற்றி விட்டனர். இதனால் வன்னிக் காடுகளில் பசி, பட்டினியால் தமிழர்கள் செத்து மடிகின்றனர். இந்த கொடுமையை தடுத்து நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை. தமிழர்கள் இனப்படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது.
தமிழர் பகுதிகளுக்கு உணவு, மருந்து போன்றவற்றை பிரதமர் அனுப்பாமல் இருப்பதற்கு, முதலமைச்சர் கருணாநிதிதான் காரணம். பதவிக்காக மத்திய அரசை மிரட்டும் அவர், ஏன் இதற்காக செய்யவில்லை. சிறிலங்க அரசுக்கு உளவு சொல்லும் வேலையை இந்திய கடற்படை செய்கிறது.
இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படவில்லை. சிறிலங்க கடற்படையினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் கொடுக்கக்கூடாது என்ற நிலையை அரசியல் கட்சிகள் உருவாக்கவேண்டும். தனது சொந்த நாட்டில்தான் இனப்படுகொலையை செய்கிறேன் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சே தப்பித்துக்கொள்ள முடியாது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்தும் காலம் ராஜபக்சேவுக்கு வரும். இலங்கைத் தமிழர்கள் கவலையில் நாங்கள் பங்கேற்போம். உங்கள் கண்ணீரை துடைக்க எங்கள் கரங்கள் நீளும். இந்த போராட்டம் ஒரு திருப்பத்தை உருவாக்கி உள்ளது. உங்கள் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக இருப்போம் என்று வைகோ கூறினார்.