இலங்கை தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்டு நடத்தும் உண்ணாவிரத போராட்டம், அரசியலில் அணி சேர்க்கும் முயற்சி போல அமைந்துள்ளது என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலர் தா.பாண்டியனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடத்துகின்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிற கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
25 ஆண்டுகளுக்கு மேலாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டு வருகிற இலங்கை தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழ்நாடு, குறிப்பாக திராவிடர் இயக்கங்கள் மிகுந்த ஈடுபாட்டோடு பல்வேறு வகைகளில் போராடுவதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஏற்றுக் கொள்ளும். அந்த உணர்விலேதான் எம்.ஜி.ஆர். கழகத்தையும் தாங்கள் அழைத்துள்ளீர்கள். தாங்கள் எடுத்துக் கொள்கிற இந்த முயற்சியில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
மேலும் நீண்டகாலமாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளித்து வரும் தமிழ் மக்களின் நியாயமான போராட்ட உணர்வுகளுக்கு ஊக்கமும் கிடைக்கும். இந்திய அரசின் செயல்முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் ரீதியான, அரசு ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு பாடுபட்டுக் கொண்டு வரும் முதலமைச்சர் கருணாநிதி போன்றவர்களின் முயற்சிகளுக்கும் வெற்றி கிடைத்து, மத்திய அரசு தன்னுடைய நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை நல்லுணர்வோடு தெரிவித்து கொள்கிறேன்.
எனினும் நீண்ட காலமாக நடைபெற்று வரும் தமிழ் மக்களின் ஆதரவு முயற்சிகளின் ஒரு கூறாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் தமிழகத்தின் அரசியலில் அணி சேர்க்கும் ஒரு முயற்சி போல் அமைந்துள்ளது என்பதையும் எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
என்றாலும் ஈழ விடுதலைக்காக போராடும் விடுதலை போராட்ட குழுவினரை காரணம் காட்டி இலங்கை மக்களின் எதிர்காலத்தையே இருட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களும் தாங்கள் நடத்தும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வதை கவனத்துடன் கருத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்ற உணர்வையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தங்கள் முயற்சி இலங்கை தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தர வாழ்த்துகிறேன்'' என்று ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.