''
சிங்கள அரசின் கோர தாண்டவத்தை தடுத்து நிறுத்திடுவதே முக்கியம் என்ற பாணியில் மத்திய அரசை வற்புறுத்தும் வகையில் நம் அனைவரது குரலும் ஒலித்தால் நல்லது'' என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நமது பக்கத்து நாடான சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் நாளும் சொல்லணாக் கொடுமைகளுக்கும், வர்ணிக்கப்பட முடியாத வாழ்வின் சோகங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
அதற்காக, இடதுசாரிகட்சிகளும், ம.தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வும் கலந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தும் என்பதையும், பா.ம.க. தலைவர் ராமதாஸ், சிறிலங்க தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் எனவும், ம.தி.மு.க. சார்பில் மறியல் எனவும், தி.மு.க. சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில் முதலமைச்சர் கருணாநிதி பேச இருப்பதும் வரவேற்கத்தக்க சிறப்புக்குரியதாகும்.
இத்தகைய தருணத்தில் நாம் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அரசியல் மாச்சரியங்களை, அணுகுமுறை கருத்துக்களை பற்றி விமர்சிக்க அந்த தளங்களை பயன்படுத்தினால், எது பொது லட்சியமோ, எது பொதுநோக்கோ அது மறைந்து ஓடி விடக்கூடும்.
எல்லா குரல்களும் சுருதி பேதமின்றி சிறிலங்காவில் ஈழத் தமிழருக்கு எதிரான கொடுமைகளை தடுத்து நிறுத்திடவே- அவர்களுக்கு சுயமரியாதையுடன் வாழ்வுரிமை கிடைத்திட வேண்டும்.
சிங்கள அரசின் கோர தாண்டவத்தை தடுத்து நிறுத்திடுவதே முக்கியம் என்ற பாணியில் டெல்லி மத்திய அரசை வற்புறுத்தும் வகையில் நம் அனைவரது குரலும் ஒலித்தால் நல்லது'' என்று வீரமணி கூறியுள்ளார்.