ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டிக்கும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்தோடு ஒருநாள் பொதுவேலை நிறுத்தம் செய்ய முன்வரவேண்டும்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவெறியாட்டம் தற்போது ஈவிரக்கமற்ற முறையில் தலைவிரித்தாடுகிறது. குழந்தைகள், முதியோர், பெண்கள் என அப்பாவி பொதுமக்களை கொடூரமாக கொன்று குவித்து வருகின்றனர்.
இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் மூலம் அவர்களை அழிப்பதுடன் எஞ்சியவர்களை அச்சுறுத்தல் மூலமாக வன்னிப்பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே சிங்கள அரசின் நோக்கமாக உள்ளது.
உணவு, உடை, மருந்து கிடைக்காமல் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட பட்டினியை திணித்து கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அடுக்கடுக்கான போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் சிங்கள இனவெறியாட்டத்தின் கொடூரம் குறைந்தபாடில்லை.
எனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒருமித்த கருத்தோடு ஒருநாள் பொதுவேலை நிறுத்தம் செய்ய முன்வரவேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.