நகைச்சுவை நடிகர் வடிவேலு அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தே.மு.தி.க.வினர் 13 பேர் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது பிடியாணை உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.
கடந்த ஆண்டு நடிகர் வடிவேலு அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக தே.மு.தி.க.வை சேர்ந்த சதீஷ் குமார், ராதாகிருஷ்ணன், தயாளன், கண்ணன், கங்காதரன், வெங்கடேசன், அன்புராஜ், முருகன், மாரி, சரவணன், கிருஷ்ணன், சையது அலி, தட்சணாமூர்த்தி ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த 22ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் குற்றம்சாற்றப்பட்ட தே.மு.தி.க.வினர் 13 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து அவர்களுக்கு நீதிபதி பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 13 பேர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த 22ஆம் தேதி தங்கள் மீது காவல்துறையினர் மேலும் வழக்குப் பதிவு செய்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், தங்கள் மீதான பிடியாணையை விலக்கி கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தே.மு.தி.க.வை சேர்ந்த 13 பேரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்களது பிடியாணை உத்தரவை ரத்து செய்த நீதிபதி, வழக்கை அக்டோபர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.