தமிழக அமைச்சரவையில் இடம் குறித்து காங்கிரஸ் மேலிடம் முறைப்படி கேட்டுக்கொண்டால், அதுபற்றி பரிசீலிப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் இடம் குறித்து இதுவரை அவர்கள் என்னிடம் கேட்க வில்லை. பத்திரிகைகளில்தான் பார்க்கிறேன். அமைச்சரவையில் இடம் வேண்டுமென காங்கிரஸ் தலைமை முறைப்படி கேட்டுக்கொண்டால், தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்வோம் என்று கூறினார்.
திருச்சியில் நடக்கும் முப்பெரும் விழா தி.மு.க. மாநாடு போல் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதை தேர்தலை முன் கூட்டியே சந்திக்க தயாராகும் மாநாடாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜனநாயக கட்சியான தி.மு.க. தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக உள்ளது என்றார்.
மார்க்சிஸ்டுகள் விஜயகாந்தை சந்தித்து பேசி உள்ளது பற்றி கேட்டதற்கு, சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற அவர், பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வருமா என்ற கேள்விக்கு இப்போது உறுதியிட்டு கூற முடியாது என்றார்.