''
ஈழ தமிழர்கள் பிரச்சினையில் சிறிலங்க அரசிடம், இந்திய அரசு அரசியல் ரீதியாக பேசி தீர்வுகாண வேண்டும்'' என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
சிறிலங்க ராணுவத்திற்கு மத்திய அரசு உதவி செய்வதை கண்டித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், தமிழர்கள் மீதான படுகொலையை நிகழ்த்துவதில் இந்தியாவும் சிங்களமும் கைகோர்த்து செயற்பட என்ன காரணம்? இங்கே ஏழை மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கல்விக்கடன் வழங்காமல் அவர்களை பிச்சை எடுக்க வைக்கின்ற அரசாங்கம், பல ஆயிரம் கோடிக்கு தளவாட உதவி, கடனுதவி கொடுக்கிறீர்களே ஏன்?
தளவாடங்கள் கொடுக்க சட்டத்தில் இடமிருக்கா? சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விவாதித்தீர்களா? யார் உங்களுக்கு அனுமதி தந்தது? குறைந்தபட்சம் தமிழ்நாட்டு முதல்வரிடமாவது பேசினீர்களா? இந்தியாவின் அயல்விவகார கொள்கை என்பது தற்சார்புக் கொள்கை அல்ல. அது அமெரிக்காவின் கொள்கைதான்.
சிங்களவருக்கான இந்தியாவின் உதவி சரியா தவறா என்பது குறித்து பொதுமக்களிடத்தில் வாக்கெடுப்பு நடத்துங்கள். உண்மை தெரியும். சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்வோருக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலிலே தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற விமான தாக்குதலில், சிங்கள படை தளத்தில் ரேடார்களை இயக்கிய இந்திய பொறியாளர்கள் காயம் அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும்.
சிறிலங்க ராணுவத்திற்காக பணிபுரியும் இந்திய அதிகாரிகளை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் சிறிலங்க அரசிடம் இந்திய அரசு அரசியல் ரீதியாக பேசி தீர்வு காண வேண்டும். ராணுவ ரீதியாக தீர்வுகாண சிறிலங்க அரசுக்கு உதவி செய்யக்கூடாது என்று திருமாவளவன் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உலக தமிழர் பேரவை தலைவர் இரா.ஜனார்த்தனம், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், கொங்கு வேளாளர்கள் கவுண்டர் பேரவை தலைவர் பாலசுப்பிரமணியன், இயக்குனர்கள் சீமான், வி.சி.குகநாதன், தங்கர்பச்சான், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.