"
நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு பா.ஜ.க.வின் அணுகுமுறையும் ஒரு காரணம் தான்'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாற்றியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கி இருப்பதன் மூலம் படி அரிசி திட்டம் அறிவித்த அண்ணாவின் கனவை கருணாநிதி நனவாக்கி இருக்கிறார்.
புது டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, தீவிரவாதிகள் இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபடும் முன்பாகவே கண்டுபிடித்து அதனை தடுப்பதற்காக இந்திய அரசு புதிய உத்திகளை கையாளவேண்டும், இதற்காக சிறப்பு உளவு படை அமைக்கவேண்டும்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் பொடா சட்டத்தை கொண்டு வருவோம் என்று அத்வானி பேசி இருப்பது ஏற்புடையது அல்ல. வகுப்புவாத பிரசாரத்தை பா.ஜ.க. செய்யாமல் இருந்தாலே போதும். நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு பா.ஜ.க.வின் அணுகுமுறையும் ஒரு காரணம் தான்.
தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மை இன மக்களுக்கு தமிழக அரசு முழு பாதுகாப்பு அளிக்கவேண்டும். அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி கைதிகளை விடுதலை செய்ததில் பாரபட்சம் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுபற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து சிறுபான்மையினர் நலனை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.