மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு தனியாக தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பனபாகலட்சுமி கூறினார்.
சென்னையில், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகமும், மத்திய அரசின் ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா, ஹோமியோபதி துறையும் இணைந்து 2 நாள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.
நிறைவு நாளான நேற்றைய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பனபாகலட்சுமி பேசுகையில், 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா உள்பட இந்திய மருத்துவத்திற்கு கடந்த நிதியாண்டைவிட 5 மடங்கு நிதி கூடுதலாக இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் தனியாக சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் சித்த மருந்துகள் பரவலாக கிடைக்கவும், சித்தா குறித்த உயர் கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று பனபாகலட்சுமி கூறினார்.