''
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறிலங்காவில் தமிழ் ஈழம் மலரும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. சார்பில் சென்னை வியாசர்பாடியில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. 7 ஆண்டுகளாக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எங்களை போல் எந்த கட்சியும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டது இல்லை.
தி.மு.க. ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறோம். அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இலவச பொருட்களை கொடுப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள்.
வன்முறை கலாசாரம், கட் அவுட் கலாசாரம், காலில் விழும் கலாசாரம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தவர் கருணாநிதிதான். 2011-ல் பா.ம.க ஆட்சிக்கு வந்தால் ஒரு துளி மதுகூட இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். 2020-க்குள் தமிழகத்தை சொர்க்கபுரியாக மாற்றுவோம்.
சிறிலங்காவில் ஈழத்தமிழர்களை ராணுவம் அழித்து வருகிறது. அந்த தமிழர்களை காக்க வேண்டமா? நம் கண் முன்னே ஒரு இனம் அழிகிறது. தமிழக மீனவர்கள் சுடப்படுகிறார்கள். அவர்களை காக்க வேண்டமா? பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும்.
சிறிலங்கத் தமிழர்களுக்கும், தங்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருப்பதாக கருணாநிதி அடிக்கடி கூறுகிறார். ஆனால் சிறிலங்கத் தமிழர்களுக்கு அவர் குரல் கொடுப்பதில்லை என்று ராமதாஸ் கூறினார்.