மின்வெட்டை கண்டித்து செப்டம்பர் 16ஆம் தேதி வணிகர்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை பெறுவது, தமிழகத்தில் மின் உற்பத்தியை பெருக்குவது, மின்சார விரயத்தை தடுப்பது ஆகியவற்றின் மூலம் தமிழகம் எங்கும் அனைத்து தொழில்களுக்கும், மக்களுக்கும் தடையின்றி சீராக மின்சாரத்தை வழங்கிட வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும், பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்து தட்டுப்பாடின்றி கிடைக்க செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில், மேற்கண்ட போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மின்வெட்டை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறது என்று வரதராஜன் கூறியுள்ளார்.