மின்வெட்டு கைவிடப்பட வேண்டும், பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக வணிகர் பேரவை தலைவர் தா.வெள்ளையன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை கண்டித்து ஒவ்வொரு மாவட்ட மின் அலுவலகம் முன்பு நாளை இரவு 7 மணி முதல் 8 மணி வரை மெழுகுவர்த்தி ஏற்றி வியாபாரிகள் போராட்டம் நடத்துவார்கள்.
முறையாக திட்டமிட்டு செயல்படாத காரணத்தாலே மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் செய்த தவறுக்கு பொதுமக்கள் தண்டனை பெறுகிறார்கள். மின்வெட்டு காரணமாக டீசல் தட்டுப்பாடு அதிகமாகி விட்டதால் விலை வாசி உயர்ந்து வருகிறது.
மின்வெட்டு கைவிடப்பட வேண்டும், பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும், 200சதுரஅடி கொண்ட கடைகளுக்கு, வீட்டுக்கு வசூலிக்கும் மின்கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தா. வெள்ளையன் கூறினார்.