மதுரை மாவட்டம் மேலூரில் கூடுதல் நியாயவிலைக் கடைகளை திறப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
மேலூரில் சில கிராமங்களுக்குச் சென்று வந்த பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கூடுதல் நியாயவிலைக் கடைகளைத் திறப்பது, மேலும் கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரியும் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சாமி தலைமையில அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் இன்று அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினர் சாமி கூறுகையில், இப்பகுதியில் உள்ள மக்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்க நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது என்று குற்றம் சாற்றினார்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.