திருச்சியில் பொறியாளர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் உள்ளிட்ட மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
திருச்சியின் புறநகர் பகுதியான காந்திநகரில் உள்ளது தங்கராஜ் என்பவரது வீடு. இவர் சிவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முகத்தை கைக்குட்டையால் மறைத்து கொண்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென புகுந்தது.
பின்னர், தங்கராஜையும் அவரது குடும்பத்தினரையும் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், ரூ.7,000 பணம், இரண்டு கைக்கடிகாரங்கள், செல்பேசிகள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்தை கொள்ளையடித்துச் சென்றது.
பொறியாளரை முகமூடி கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணம் உள்ளிட் மதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.