பள்ளி ஆசிரியைகளுக்கு வனவிழிப்புணர்வு நடைபயணம்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி ஆசிரியைகளுக்கு வனவிழிப்புணர்வு நடைபயண பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபி உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வனவிழிப்புணர்வு குறித்த விளக்கத்தை அளிக்க நேரடியாக வனத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு அதன் முக்கியதுவத்தை தெளிவுபடுத்தும் பயிற்சியை சுடர் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் உள்ளது ரேங்க் சி.பி.எஸ்.இ. பள்ளி. இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வனவிழிப்புணர்வு குறித்த நடைபயிற்சியை சுடர் தொண்டு நிறுவன செயலாளர் எஸ்.சி.நடராஜ் ஏற்பாடு செய்தார்.
அதன்படி தலமலை வனப்பகுதியை சேர்ந்த பெஜலட்டியில் இருந்து நடைபயணமாக தடசலட்டி, இட்டரை மற்றும் கேர்மாளம் வனப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
பயிற்சியின்போது உலக வனவிலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் களப்பணியாளர் சிவசுப்பிரமணியம் வனவிலங்குகளின் குணங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தார்.
கட்டாயம் ஆசிரிய, ஆசிரியைகள் தங்கள் பள்ளியில் ஒவ்வொரு மரக்கன்றுகள் வைத்து நாள்தோறும் அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் என சுடர் தொண்டு நிறுவன செயலாளர் எஸ்.சி.நடராஜ் வலியுறுத்தினார். கட்டாயம் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என பள்ளியின் தாளாளர் அருள் தெரிவித்தார்.