அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 15ஆம் தேதி முதல் அ.இ.அ.தி.மு.க சார்பில் பொதுக் கூட்டம், பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி நடந்த அ.இ.அ.தி.மு.க பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அ.இ.அ.தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழ் நாட்டிலும், பிற மாநிலங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வரும் 15ஆம் தேதி முதல் நூறாவது ஆண்டு முழுவதும் பொதுக் கூட்டங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், மாணவ, மாணவியருக்கான கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றும், அ.இ.அ.தி.மு.க கொடியை ஏற்றி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதனடிப்படையில் செப்டம்பர் 15 முதல் 17 வரை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடை பெற உள்ளன.
அதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக இருந்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, வாகன ஓட்டுனர் பயிற்சி போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் முதல்கட்டமாக அண்ணா பிறந்த நாளான 15ஆம் தேதி துவங்கப்படுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி யில் இந்த சிறப்பு திட்டங்களை நான் துவக்கி வைக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.