சென்னையில் இன்று ஒருநாள் மட்டும் 10 நிகழ்ச்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
சென்னை நகரை சிங்கார சென்னையாக மாற்றும் முயற்சியில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுவருகிறார். சென்னையில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பூங்காக்களில் இரவு நேரங்களிலும் வாக்கிங் செல்லும் வகையில், மின் விளக்குகள் வசதிகளுடன், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காக்களுக்கு வரும் பறவைகள் தங்குவதற்காக மரங்களில் கூடுகளும் அமைக்கப்பட்டன.
சென்னையில் இன்று ஒருநாள் மட்டும் நடைபெறும் 10 நிகழ்ச்சிகளில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 13 பூங்காக்கள், 18 கட்டடங்கள், 2 உயர் மின்விளக்குகள், ஆட்டிறைச்சி கூடம், சிறு பாலம் ஆகியவைகளை திறந்துவைக்கிறார். இவை அனைத்தும் தென்சென்னையில் உள்ள 19 வார்டுகளில் திறக்கப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.