ஒரிசா பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்வதை போல காஷ்மீரில் மதவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்களுக்கும் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்ட வசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவேண்டும்.
ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும்.
எனவே, பிரதமர் ஒருகண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம். காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரிசாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.