சென்னையில் இருந்து அயல்நாட்டுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கடத்த முயன்றவரை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணத்தை சேர்ந்தவர் அப்துல்ஹசன் (55). இவர் சவூதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் ஜெடாஹ் செல்வதற்காக இன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது, சுங்கத்துறையினர் அப்துல்ஹசன் உடமைகளை சோதனை செய்த போது ரூ.500, ரூ.1,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஹஜ் பயணிகளுக்கு உணவு மற்றும் துணிகள் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அப்துல்ஹசன் கூறினார்.
ஆனால், அதிகாரிகள் ரூ.5,000 க்கும் மேல் இந்திய பணத்தை கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்தனர். இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அப்துல்ஹசன் கூறினார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட அப்துல் ஹசனுக்கு ஹவாலா மோசடியிலும் தொடர்பிருக்கலாம் என வருவாய்துறை அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.