சென்னை பெருநகர்ப் பகுதிக்கான இரண்டாம் முழுமைத் திட்டத்திற்கு தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆண்டு காலம் 2026 ஆகும். 2026ல் சென்னை பெருநகரின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 126 லட்சங்களாக இருக்கும்.
இது சென்னை மாநகரத்தின் 59 லட்சம் மக்கள் தொகையையும் உள்ளடக்கியுள்ளது. வீடுகளின் தேவை வருடத்திற்கு 38,000 முதல் 62,000 வீடுகள் என இத்திட்டக் காலத்தில் வேறுபடும். 2026 வரை வீடுகளின் மொத்த தேவை 12.37 லட்சங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை, கடந்த கால போக்கு, பல பிரிவுகளின் எதிர்காலத் தேவைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வலுவான பொருளாதாரத்திற்கு ஆதாரம் மற்றும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தேவையான தொழில் வளர்ச்சிக்கான உத்திகள், கொள்கைகள் தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு தேவையான நலி உபயோக மண்டல ஒதுக்கீடு போன்றவற்றை இரண்டாவது முழுமைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் போக்குவரத்து பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு, இவற்றுக்கான தீர்வுகள் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 45 கி.மீ நீளம் கொண்ட மெட்ரோ ரயில், நகர நீர் வழிகளின் மேல் விரைவு பாதைகள், சரக்கு போக்குவரத்து தடங்கள் மற்றும் பேருந்து முன் உரிமை தடங்கள், அதிக மேம்பாலங்கள் மற்றும் பாதசாரிகளுக்கான வசதிகள் போன்ற பெரிய திட்டங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தை கட்டுப்படுத்த நீர் நிலைகளின் கொள்ளளவை ஏற்படும் அதிக நீரை நிலத்தடி நீர் ஆதாரம் பெருக்க பயன்படுத்துதல் போன்ற முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
நகர்வாழ் ஏழை மக்களின் வீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண அடிப்படை வசதிகள் மற்றும் அவர்கள் உறைவிடத்தை அமைத்துள்ள பகுதிகளை மேம்படுத்தி ஒரு சுகாதாரமான சூழலை உருவாக்குதல் மற்றும் குடிசைப் பகுதிகளில் எங்கெங்கு முடியுமோ அங்கேயே, உறைவிட வளர்ச்சி போன்ற உத்திகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனியார், பொதுமக்கள் கூட்டாண்மை மூலம் குறைந்த வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வீடுகள் கட்டுதல், குறைந்த வருவாய், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வீட்டு வசதிகளை பெருக்க 45 சதுர மீட்டர் மிகாமல் வீடுகள் கட்டும் திட்டங்களில் கூடுதல் 0.25 தரை பரப்பு குறியீடு அளித்தல், ஒரு ஹெக்டேருக்கு மேல் உள்ள பெரிய திட்டங்களில் குறைந்த வருவாய், பொருளாராத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 விழுக்காடு இடம் அவ்விடத்திலேயோ அல்லது அவ்விடத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலுள்ள இடத்தில் ஒதுக்கப்பட வேண்டும் போன்ற உத்திகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு பங்களிப்பாளர்கள் மற்றும் பொது மக்களின் கருத்துக்களை கணக்கில் கொண்டு முதல் முழுமைத் திட்டத்தின் வளர்ச்சி விதிமுறைகள் முழுமையாக மறு ஆய்வு செய்யப்பட்டு, தற்போதைய மற்றும் வருங்கால தேவைகளுக்கு தக்கவாறு மறுவரைவு செய்யப்பட்டு இரண்டாம் முழுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆறு குடியிருப்புகளுக்கு மேல் உள்ள கட்டடங்கள் சிறப்பு கட்டடங்களாக மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர்ப் பகுதியின் இதர பகுதியிலும் அடுக்கு மாடிக்கட்டடங்கள் அனுமதிப்பது (தீவுத் திடல், அனுமதிக்கப்பட்ட மனை பிரிவு, நீருற்று பகுதிகள் மற்றும் செங்குன்றம் நீர் பரப்பு பகுதி நீங்கலாக) மயிலாப்பூர், வேளச்சேரி துரித ரயில் போக்குவரத்து பாதையின் தாக்கப் பகுதியில் சிறப்பு மற்றும் தொகுப்பு வளர்ச்சிகளுக்கு ஒவ்வொரு குடியிருப்புகளின் பரப்பு 75 ச.மீட்டருக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் தரைபரப்பு குறியீடு 2 ஆக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
45 சதுர மீட்டர் பரப்பிற்கு மிகாத குடியிருப்புகளை கொண்ட சிறப்பு கட்டடங்கள் மற்றும் தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களுக்கு தரைப்பரப்பு குறியீடு 0.25 கூடுதலாக அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி அல்லாத கட்டடங்களுக்கு ஊக்க தரைப்பரப்பு குறியீடு 0.5 ஆகவும் (பொதுவாக அனுமதிக்கப்படும் 1.5 விற்கு கூடுதலாக) மற்றும் அடுக்கு மாடி கட்டடங்களுக்கு 1 ஆகவும் (பொதுவாக அனுமதிக்கப்படும் 2.5 விற்கு கூடுதலாக) என வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தரைப் பரப்பு குறியீட்டிலிருந்து விலக்களிக்ப்பட்ட சார்புடைய கட்டங்களின் பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்து உபயோக மண்டலங்களிலும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை அனுமதிக்க ராஜிவ்காந்தி சாலை (பழைய மாமல்லபுரம் சாலை) நெடுகிலும் தகவல் தொழில் நுட்ப பகுதியாக வரையறுத்தல்.
ஆதார குடியிருப்பு பகுதியில் பணிக்கு செல்லும் மகளிர் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் அமைத்தல், மனைப்பரப்பு குறைந்தது 200 லிருந்து 660 ச.மீ வரை இருக்கும் பட்சத்தில் 9.0 மீட்டர் அகலமுள்ள சாலைகளில் 12 குடியிருப்புகள் வரை கொண்ட சிறப்பு கட்டடங்கள் மற்றும் மனை பரப்பு குறைந்தது 1100 ச.மீ வரை இருக்கும் பட்சத்தில் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு தடையில்லாமல் அளித்தல்.
12 மீட்டர் மற்றும் 15 மீட்டர் அகலமுள்ள சாலைகளில் தரைப்பரப்பு மற்றும் உயர கட்டுப்பாட்டுடன் அடுக்குமாடி கட்டடங்களை அனுமதித்தல், சிறப்பு கட்டடங்களுக்காக திட்ட குறியீடுகள் மனை பரப்பு, குடியிருப்புகளின் எண்ணிக்கை மற்றும் தளங்களின் எண்ணிக்கை, குறைப்பட்ட மனை பரப்பு மற்றும் பக்க இடைவெளிகளின் தேவைகள் சிறப்பு நபர்களுக்கான வழிவகைகள் சேர்க்கப்பட்டு, நீரூற்று பகுதியில் வளர்ச்சிகைள கட்டுப்படுத்தல், பாரம்பரியமிக்க கட்டடங்களை பாதுகாத்தல், சாலை அகலப்படுத்த குடிசைப் பகுதிகளின் மறு வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளர்ச்சி உரிமை மாற்றம் முதலியன உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கட்டடங்களுக்கு 0.25 கூடுதல் தரைபரப்பு குறியீட்டு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை அகலம் 30.5 மீட்டருக்கு அதிகமுள்ள சாலைகளில் 60 மீட்டர் உயரத்திற்கு அதிகமுள்ள உயர்மாடி கட்டடங்கள் அனுமதித்தல் போன்ற முக்கிய திருத்தங்கள் இரண்டாம் முழுமைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயலாக்க, கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது இரண்டாம் முழுமைத் திட்டத்தின் நன்மை பயக்கும் ஓர் சிறப்பு அம்சமாகும். இரண்டாம் முழுமைத் திட்டம் சென்னை பெருநகரில் வளர்ச்சிகளை ஊக்குவிக்கவும், எல்லா பிரிவு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.
சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டத்தின் பிரதிகள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.