காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்ட ஒருவர், நஷ்டஈடுடாக ரூ.10 லட்சம் கேட்டுத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ அரசு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் தியாகராயர் நகர் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பதில் அளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நண்பன் வீட்டில் 40 பவுன் நகையை திருடிய வழக்கில் சென்னை தியாகராயர் நகர் காவல்துறையினர் அருண்குமார் (22) என்பவரை கைது செய்தனர்.
அப்போது, அவரை காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதில் அவருடைய 9 விரல்கள் துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை கேள்விப்பட்ட மனித உரிமை அமைப்பு (People's Union for Civil Liberties ) சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது.
அருண்குமார் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாலமுருகன் தாக்கல் செய்த அந்த மனுவில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அருண்குமார் குமாரை தியாகராயர் நகர் காவல்நிலையத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவரது கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். உடனடியாக இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதில் அளிக்கும் படி தமிழக அரசு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர், தியாகராயர் நகர் காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.