''
பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்களை ஒரு போதும் அனுப்பியதில்லை'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தி.மு.க. தலைவர் கருணாநிதி 30.8.2008 அன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்கு அ.இ.அ.தி.மு.க ஆட்களை அனுப்பி வைத்தது என்ற ஓர் அபாண்டமான பொய்யை மீண்டும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.
மேற்படி பொய்யை இதற்கு முன்னர் கருணாநிதி பலமுறை கூறியிருக்கிறார். அப்போதெல்லாம் நான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளேன். இப்போது மீண்டும் அதே பொய்யை திரும்பக் கூறியிருக்கிறார்.
அ.இ.அ.தி.மு.க. ஒருபோதும் கரசேவைக்கு ஆட்களை அனுப்பியதில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். அ.இ.அ.தி.மு.க. யார் யாரை அனுப்பியது என்பதை கருணாநிதியால் சொல்ல முடியுமா? இதுபோன்று பொய் சொல்வதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமியர்களை தீவிர வாதிகள் என்று சொன்ன கருணாநிதி மதச்சார் பின்மை பற்றி பேசும் தகுதியை என்றைக்கோ இழந்து விட்டார்.
அடுத்ததாக, 'ஜெயலலிதா மீது கூட வழக்கு இருக்கிறது. அவர் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம்' என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்து இருக்கிறார். கருணாநிதியும், கருணாநிதி குடும்பத்தினரும் தங்களை அ.இ.அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் வந்து கேட்கின்ற காலம் விரைவில் வருமே தவிர, நான் அங்கு போய் சேரக்கூடிய காலம் நிச்சயமாக வரவே வராது.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் உதவி பெற்றதெல்லாம் இன்று கருணாநிதி மறந்துவிட்டார் போலும்!
என்மீது இருக்கும் வழக்குகள் எல்லாம் கருணாநிதியால் புனையப்பட்ட பொய் வழக்குகள் என்பதையும், அதில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நான் விடுதலை பெற்றிருக்கிறேன் என்பதையும் அனைவரும் அறிவர்.
ஆனால் என் மீது கருணாநிதி போட்ட வழக்குகளை, நான் 2001 முதல் 2006 வரை முதலமைச்சராக இருந்த போது கூட எனது அதிகாரத்தைப்பயன்படுத்தி வாபஸ் பெறாமல், தைரியமாக அந்த வழக்குகளை எல்லாம் நீதிமன்றங்களில் நேர்மையாக எதிர்கொண்டு, ஒவ்வொன்றாக வழக்குகளில் வென்று வருகிறேன்.
எனவே, என்னைப்பற்றியோ, என்மீதுள்ள வழக்குகளைப்பற்றியோ பேசுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்வது நல்லது என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சி விரைவில் கவிழப் போகிறது, அதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன.
என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.