அரிசி கடத்தலில் ஈடுபட்டால் வாகனங்களின் அனுமதிச் சீட்டுகள், பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொது விநியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருளான அரிசி கடத்தலை தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் உத்தரவிற்கிணங்க உணவு பொருள் வழங்கல் துறையினரின் ஒத்துழைப்புடன் போக்குவரத்து துறை பொது விநியோக திட்டத்தின்கீழ் இன்றியமையாப் பண்டங்களை கள்ளத்தனமாக வாகனங்களில் எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
போக்குவரத்து துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் மேலே கூறப்பட்ட இனங்களில் தீவிர தணிக்கைகள் மேற்கொள்வதுடன் பிற துறைகளிலிருந்து பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் கள்ளத்தனமாக அரிசி கடத்த பயன்படுத்தப்படும் வாகனங்களின் அனுமதி, பதிவுச் சான்று மற்றும் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை போக்குவரத்து துறை அதிகாரிகளால் 198 அனுமதிச் சீட்டுகள், 165 பதிவுச் சான்றுகள் மற்றும் 188 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே சரக்கு வாகன உரிமையாளர்கள் அனுமதிதாரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோர் இம்மாதிரி சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அவ்வாறு ஈடுபடும் வாகனங்களின் அனுமதிச் சீட்டுகள், பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரத்து செய்யப்படுவதோடு மேற்கண்ட இனத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.