பல்வேறு குற்ற வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக சர்வதேச காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த குற்றவாளி சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
இவரது புகைப்படம், இவரைப் பற்றிய விவரங்கள் உலகில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வில்லியம் பீட்டர் பிரான்சில் இருந்து தனியார் விமானம் மூலம் இன்று மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வந்தார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்திய போது இவர் சர்வதேச காவல் துறையினரால் (இன்டர்போல்) தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து வில்லியம்ஸ் பீட்டர் வந்தது பற்றி குடியுரிமை அதிகாரிகள், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்நது மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து வில்லியம்ஸ் பீட்டரை கைது செய்தனர்.சதிச் செயல் எதுவும் செய்ய சென்னை வந்துள்ளாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் சர்வதேச காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிகிறது.