காஞ்சிபுரத்தில், விஜய டி. ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (LDMK) நேற்று நடத்திய கூட்டத்தில் புகுந்து பெட்ரோல் குண்டை வீசி கலகம் ஏற்படுத்திய விஜயகாந்தின் தே.மு.தி.க. (DMDK) கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
சிறிலங்கா ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து காஞ்சீபுரம் வணிகர் வீதியில் விஜய டி. ராஜேந்தரின் லட்சிய தி.மு.க. கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் விஜய டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசுகையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் கூட்டத்தில் நின்றிருந்த திம்மசமுத்திரம் ஒன்றிய தே.மு.தி.க. அவைத்தலைவரும், காஞ்சீபுரம் ஒன்றிய கவுன்சிலருமான உமாபதி ஆத்திரமடைந்து சத்தம் போட்டதோடு மேடையை நோக்கி தான் தயாராக வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசினார். அந்த குண்டு வெடித்து சிதறியது.
இதையடுத்து காவல் துறையினர் விரைந்து வந்து உமாபதியை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.