திருச்சியில் தனியார் பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட செயலர் ஸ்ரீதர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சியில் தனியார் பேருந்து இயக்குபவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், பயணக் கட்டணத்தை தன்னிச்சையாக உயர்த்தியுள்ள தனியார் பேருந்து இயக்குபவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.