அமர்நாத் கோயில் நிலப் பிரச்சனை தொடர்பாக இந்து இயக்கங்கள் நடத்தும் மறியல் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் பங்கேற்பார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாரம்பரியமான அமர்நாத் கோயிலுக்கு லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை புரியும் போது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தெரியும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் இந்துக்கள் வருவதால் காஷ்மீரின் ஜனதொகை விகிதம் மத ரீதியான அளவில் மாறி விடும் என பிரச்சாரம் செய்கிறார்கள். மண்ணின் மைந்தர்களான காஷ்மீரத்து பண்டிதர்களை அடித்து விரட்டி காஷ்மீருக்கு மத ரீதியான ஜனத்தொகையை மாற்றியவர்கள்தான் இன்றைக்கு இப்படி பேசுகிறார்கள்.
அமர்நாத் காஷ்மீரில் இருந்தாலும் தரிசிக்க செல்லும் யாத்ரீகர்கள் குமரி முதல் இமயம் வரை உள்ள இந்துக்கள் ஆவர். அவர்களுக்கு இப்போது பிரச்சனை வந்துள்ளது. ஜம்முவில் வாழும் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்காக இப்போது தீவிரமாக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு தென்கோடியில் உள்ள நாமும் உறுதுணையாக உள்ளோம் என்பதை உணர்த்தியாக வேண்டும்.
எனவே ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல் நடத்த தேசிய இந்து இயக்கங்கள் முடிவு செய்துள்ளது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் பா.ஜ.க. தலைவர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு நமது உணர்வினை அரசுக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் உணர்த்துவார்கள் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.