அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில், நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்'' என்று கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் வாழ்க்கையில் இது போன்ற புகார்கள் வருவது சகஜம் என்றும் காவல்துறையினர் கூடவே இருப்பதால் நான் தனியாக வெளியில் போய் எதுவும் செய்ய முடியாது என்றார்.
இந்த வழக்கு பற்றி கட்சி தலைமைக்கு தெரியும் என்று தெரிவித்த அவர், என் பதவிக்கெல்லாம் ஆபத்து வராது என்றார். மேலும் அவர் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அமைச்சர்.
என் பெயரை கெடுக்க வேண்டும் என்று நினைத்து இத்தகைய செயலில் யாரோ ஈடுபடுகிறார்கள். இதன்மூலம் கட்சியை பாதிக்க செய்யலாம் என்று அவர்கள் நினைப்பது முட்டாள்தனம். எதுவாயினும் நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். வழக்கு தொடர்பாக எனக்கு இன்னும் தாக்கீது வரவில்லை. வந்ததும் பதில் அளிப்பேன் என்று அமைச்சர் ராஜா கூறினார்.