கச்சத்தீவை உள்ளடக்கிய கடல் பகுதிகளில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க கடற்படையை கண்டித்தும் சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா கடற்படையை கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன், கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று காலை சென்னை ஆழ்வார் பேட்டை டிடிகே சாலையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்துக்கு ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக மியூசிக் அகாடமி அருகே கூடினர்.
அப்போது பேசிய கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா பேசுகையில், ''1974ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் உரிமை மறுக்கப்படுவதால் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும்'' என்றார்.
இதைத் தொடர்ந்து ஊர்வலத்தை தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் துவக்கி வைத்தார். அவர்கள் ஊர்வலமாக சென்று துணை தூதரகம் முன்பு முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.