வன்னியர் சங்கத் தலைவரும் பா.ம.க. பிரமுகருமான காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க.- பா.ம.க. உறுப்பினர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காடுவெட்டி குரு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பா.ம.க. மாநகராட்சித் தலைவர் மு.ஜெயராமன் பேசிய கருத்துக்களுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு பா.ம.க. உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதனால் மன்றத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து ஜெயராமனின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க மேயர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். ஆனால் தனது கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று மேயருடன் ஜெயராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு மேயர் சம்மதிக்காததால் ஜெயராமன் தலைமையில் பா.ம.க. உறுப்பினர்கள் 16 பேரும் வெளிநடப்பு செய்தனர்.