சுதந்திரத் தினம் அன்று சென்னை, நெல்லையை தகர்க்க சதித்திட்டம் திட்டிய முக்கியமானவர்களில் மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
பெங்களூரு, அமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லையில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்து, சென்னைக்கு கொண்டு வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேட்டையில் மக்தூம் பள்ளிவாசல் தெருவில் உள்ள அப்துல் கபூர் தங்கி இருக்கும் வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்கப்படும் 21 பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கபூரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவனுக்கு உடந்தையாக பலர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
மேலும் விசாரணையில், அப்துல் கபூர் வீட்டருக்கே உள்ள அன்வர் பாதுஷா என்பவர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். அவர் மின்வயர் இணைப்பு குறித்து அடிக்கடி கபூருக்கு விளக்கம் கொடுத்ததோடு, அவனுடன் இணைந்து டைமர் கருவிகளை அன்வர் பாதுஷா செய்து கொடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா தலைமையில் காவல்துறையினர் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது முகமது அன்வர் பாதுஷா வீட்டில் இருந்தது தெரியவந்ததை தொடர்ந்து அவனை வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர், உள்ளே புகுந்து அன்வர் பாதுஷாவை கைது செய்தனர்.
மேலும் யாருக்காவது சதித்திட்டத்தில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அவனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.