தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று காடுவெட்டி குரு தாக்கல் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு 6 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தன்னை கைது செய்ததை எதிர்த்து வன்னிய சங்கதலைவர் காடு வெட்டி குரு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.
அதில், ''6 மாதங்கள் கழித்து என்னை கைது செய்திருப்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை விதிக்கு முரணானது. இதற்கான உத்தரவை பிறப்பிக்க மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் இல்லை.
கைதுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. அரசியல் பழி தீர்க்க, வேண்டும் என்றே இவ்வழக்கு போடப்பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்து, திருச்சி சிறையில் இருந்து என்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும்'' என்று காடுவெட்டி குரு தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முருகேசன், பழனிவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று வந்தது. அப்போது, 6 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர், மாநில அரசின் பொதுத் துறை செயலாளர், மத்திய அரசின் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.