மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி.மு.க. நடத்திய உண்ணாவிரதம் முழுக்க முழுக்க கண் துடைப்பு நாடகம்'' என்று அ.இ.அ.தி.மு.க. செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, கச்சத் தீவை விட்டுத்தர முடியாது என்று 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதை அவர் முன்மொழிந்ததாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால், இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 26.6.1974 அன்றும், சிறிலங்கா பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே 28.6.1974 அன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்துத் தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்.
உண்மையிலேயே, தமிழக மக்களின் மீது, குறிப்பாக மீனவ மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால், இந்திய - சிறிலங்கா உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறி விட்டார் கருணாநிதி.
சட்டப்பேரவை தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் 'வருத்தம் அளிக்கிறது' என்று கருணாநிதி குறிப்பிட்டி ருக்கிறாரே தவிர, 'எதிர்க்கிறோம்' என்ற சொல் எங்கேயும் இடம் பெற வில்லை.
'மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி.மு.க. உண்ணாவிரதம்' என்பது தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க.வே உண்ணாவிரதம் இருப்பதற்கு சமமாகும். முழுக்க, முழுக்க ஒரு கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள்.
முதலமைச்சர் கருணாநிதி, மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையையும் பயன்படுத்தி, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாலே மீனவர்களின் கோரிக்கைகள் எளிதில் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.