மருத்துவர்களை தாக்கினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
சென்னை அருகே உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனை டாக்டர் கடந்த மாதம் தாக்கப்பட்டார். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவரை தாக்கிய வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார்.
அதன் அடிப்படையில் மருத்துவரையோ, மருத்துவமனை ஊழியர்களையோ தாக்கினாலும், மருத்துவமனையை சேதப்படுத்தினாலும் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை இச்சட்டத்தின் மூலம் கிடைக்கும்.
முதலமைச்சர் கருணாநிதியிடம் கலந்து ஆலோசித்த பிறகு மருத்துவர்களை பாதுகாக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவல் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.