மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால், விலாசம் தேடும் முயற்சி என்று கொச்சைப்படுத்துவதா? என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கச்சத்தீவு பிரச்னையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று தி.மு.க. உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியுள்ளார். ஆனால் அதேநேரத்தில் மீனவர்களுக்காக ராமேஸ்வரத்தில் தே.மு.தி.க நடத்திய போராட்டம் குறித்து அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்துள்ளனர்.
எனது விலாசத்தைத் தேட முயற்சிப்பதாகவும், பைத்தியக்காரன் என்றும், உடை அணியாத நாடகம் நடத்துவதாகவும் வசைபாடியுள்ளனர். கருணாநிதியின் ரிமோட் கண்ட்ரோலில்தான் மத்திய அரசு இயங்குவதாக அமைச்சரே பேசியிருக்கிறார். அப்படியானால் அதை இயக்கி கச்சத்தீவை மீட்டிருக்கலாம் அல்லவா? அதை விடுத்து கடலோர மாவட்டங்களில் தி.மு.க. உண்ணாவிரதம் இருப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் அல்லவா?
நான் ராமேஸ்வரத்தில் என்ன பேசினேன் என்பது பெருவாரியான பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்ட பிறகும் திரித்துப் பேசுகிறார்கள். 'பைத்தியக்காரன்' என்று என்னை சொல்கிறார்கள். பைத்தியக்காரர்களில் பலவகை உண்டு. சிலருக்கு பண பைத்தியம், சிலருக்கு பதவி பைத்தியம், இன்னும் சிலருக்கு செங்கோல் பைத்தியம், ஆனால் எனக்கோ ஏழை மக்கள் மீது பைத்தியம். ஆகவே என்னை அவ்வாறு அழைத்ததில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.
மீனவர்கள் பொழிந்த கண்ணீர் எந்த அளவிற்கு என்னை வேதனைப்படுத்தியிருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று ஒருபக்கம் முதல்வர் கருணாநிதி அங்கலாய்க்கிறார். மறுபக்கம் கடலுக்குச் செல்லமாட்டோம் என்று உண்ணாவிரதம் இருக்கும் ஏழை மீனவர்கள் நிலை கண்டு நான் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதை விலாசம் தேடும் முயற்சி என்று கொச்சைப்படுத்துகின்றனர்.
விலாசம் தேடவேண்டிய அவல நிலையில் நாட்டு மக்கள் என்னை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பலருக்கு விலாசம் தேடித்தரும் நிலையிலேயே என்னை மக்கள் வைத்துள்ளனர். ஆனால் பதவி போனால் பலர் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.