''மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பதென்றால் அதற்காக உட்கார வேண்டிய இடம் செங்கோட்டை அமைந்துள்ள டெல்லி பட்டணமே தவிர, கோட்டைப்பட்டணமும், தேவிப்பட்டணமும் உள்ள புதுக்கோட்டை அல்ல'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், படகுகளையும், மீன்பிடிக்கும் வலைகளையும் சேதப்படுத்தி கொடுமைப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. கடந்த 35 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 800-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
1974-ம் ஆண்டில் கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பம்தான் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முழு முதல் காரணம். அப்போது தமிழகத்தில் தி.மு.க. அரசுதான் பதவி வகித்தது. இன்றைய முதலமைச்சர் கருணாநிதிதான் அன்றைக்கும் முதலமைச்சர்.
கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்த ஒப்பந்தம் கையெழுத்தான அன்றும் சரி, அதன் பிறகு 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்ட போதும் சரி, குறைந்தபட்சம் கச்சத்தீவை சுற்றி நம்முடைய மீனவர்களுக்கு பாரம்பரியமாக இருந்து வந்த மீன் பிடிப்பு உரிமையை பெற்றுத் தர எத்தகைய நடவடிக்கைகளை முதலமைச்சரும், அவரது அரசும் மேற்கொண்டனர் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் கதையாக உண்ணாவிரதம் என்று நாடகமாடுவது யாரை ஏமாற்றுவதற்காக? கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பது தவறல்ல. மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருப்பதென்றால் அதற்காக உட்கார வேண்டிய இடம் செங்கோட்டை அமைந்துள்ள டெல்லி பட்டணமே தவிர, கோட்டைப்பட்டணமும், தேவிப்பட்டணமும் உள்ள புதுக்கோட்டை அல்ல. அதன் அருகாமையில் உள்ள முத்துப்பேட்டையும் அல்ல.
டெல்லிக்கு போங்கள். சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து பேசுங்கள். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண 1974-ம் ஆண்டிலும், பின்னர் 1976-ம் ஆண்டிலும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுங்கள் என்று வலியுறுத்த வேண்டும். குறைந்தபட்சம் கச்சத்தீவை சுற்றிலும் நமது மீனவர்களுக்கு பாரம்பரியமாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத் தாருங்கள் என்று வாதாட வேண்டும். அங்கே மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர் ஒருவரின் உயிருக்கு இலங்கை கடற்படையினரால் ஊறுவிளைந்தால் இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கை விட வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.