''சென்னையில் தினமும் ஒருமணி நேரமும், மற்ற நகரங்களில் தினமும் இரண்டு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்'' என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி மின் பற்றாக்குறையை சமாளிப்பது பற்றி தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' தமிழ்நாட்டில் தற்போது எதிர்பார்த்த அளவு காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கவில்லை. தென்மேற்கு பருவமழையும் பெய்யாததால் நீர் மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவு இல்லை. மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் இருந்தும் 60 விழுக்காடு தான் கிடைக்கிறது. எனவே நாள் ஒன்றுக்கு நமக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஒரு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
மின்பற்றாக்குறைய சமாளிக்க சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் பகல் நேரத்தில் மின் வெட்டு அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் 1 மணி நேரமும், மற்ற நகரங்களில் 2 மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
சென்னை 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பகல் நேரத்தில் ஏதாவது 1 மணி நேரம் மின்தடை இருக்கும். தமிழ்நாடு முழுவதும் தற்போது அறிவிக்கப்படாத மின்தடை இருப்பதாக குறை கூறப்படுகிறது. திங்கட் கிழமை முதல் இந்த குறை இருக்காது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த பிறகு நிலைமை சீரடையும்'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.