திண்டுக்கல் மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராணி, சிறுமி துர்காதேவி இருவரும் குல்வார் குளத்தில் கடந்த மே 28ஆம் தேதி துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுமி துர்காதேவி நீரில் அடித்துச் செல்வதைப் பார்த்து அதிர்ச்சியுற்ற ராணி, துர்காதேவியைக் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.
அவர்கள் இருவரது குடும்பங்களின் வறுமை நிலையைக் கருதி, நிவாரண உதவி வழங்க வேண்டுமென திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று, உயிரிழந்த சிறுமி துர்காதேவி, ராணி குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வீதம், மொத்தம் ரூ.1 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.