பெட்ரோல் விலை வருங்காலத்தில் ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளதால் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் காமராஜர் கைத்தறி கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடந்தது. மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சங்கத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியது: தமிழக முதல்வரின் முயற்சியால் காமாரஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டில் தற்போது பெட்ரோல், டீசல் , கியாஸ் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.
கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது லிட்டர் ரூ.50 க்கு விற்கப்படும் பெட்ரோல் இன்னும் சிறிது காலத்தில் ரூ.100 வரை விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது. இதற்கு நாம் மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்கு மாறாக மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் சமையல் செய்வதற்கு மின்சார அடுப்பு, பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்கள் பேட்டரியில் இயங்கவேண்டும். இந்த மாற்று எரிபொருளை தயாரிக்கத்தான் அணுசக்தி தேவை. இதற்குத்தான் அணு சக்தி ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.